Special

ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி துணை

“பாலையூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவிலின் சிறப்பு”

இந்த மஹாலக்ஷ்மி கோவில் கட்டுவதற்கு முன் இப்படி ஒரு கோவில் வேறு எங்கும் இருக்கிறதா? இது எப்படி அமையும்? என்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி “க்கு என்று தனிக் கோவில் என்பது மும்பையில் தான் உள்ளது என்பதும் வேறு எங்கும் கிடையாது என்பதும் பிறகு தான் தெரிய வந்தது. இந்தியாவில் இரண்டாவது தென்னாட்டில் முதலாவது “ஸ்ரீ மஹாலக்ஷ்மி “யின் தனிக்கோவில் என்ற பெருமையை இத்திருக்கோவில் அடைகிறது, மும்பையில் இருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி விக்ரஹம் 3 அடி உயரம் என்பது குறிப்பிடத்தக்கது. பாலையூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி விக்ரஹம் பீடத்திலிருந்து கிரீடம் உச்சி வரை 5 அடி உயரமும் 1 1/2 டன் எடையும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான அம்சம் வாய்ந்ததாகும். இந்த 5 1/2 அடிக்கு விக்ரஹம் வடிக்க முக்கிய காரணம் உண்டு.

அதாவது ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு என கோவில் கட்ட தீர்மானித்தவுடன், பாலையூர் நகரத்தார்கள் மஹாபலிபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரி முதல்வர் மூலம் ஆலோசனை கேட்டு திரு.சுப்ரமணியன் (திராவிடன்) என்ற ஒரு சிற்பியிடம் இந்த “ஸ்ரீ மஹாலக்ஷ்மி விக்ரஹம்” செய்யும் பொறுப்பை ஒப்படைத்தோம். நாங்களும் ஸ்தபதி திரு.குப்புசாமி ஆசாரி அவர்களும் போய் அவர்களிடம் இது பற்றி சொன்னதும், நகரத்தார் சமூகத்தார்கள் தான் மிகப் பிரம்மாண்டமான முறையில் கோவில் திருப்பணிகள் செய்து வருகிறீர்கள். அந்த வகையில் இதுவரை எல்லோரும் சிவன் கோவில், விஷ்ணு கோவில், பிள்ளையார் கோவில் முருகன் கோவில் மாரியம்மன் கோவில் போன்ற கோவில்களையே கட்டி வந்தனர்.

பாலையூர் நகரத்தார் நீங்கள் தான் ஸ்ரீ மஹாலக்ஷ்மி க்கு என்று தனி ஆலயம் கட்ட முன் வந்துள்ளீர்கள். அதுவும் காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியாரின் அருளாசியில் அமையும் இந்த திருக்கோவில் வெகு சிறப்புடன் இருக்கும் என்று கூறினார்கள். அதன்பின் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் விக்ரஹம் எத்தனை அடி உயரத்தில் வேண்டும் என கேட்க, நாங்களும் இரண்டு அடி உயரத்தில் வேண்டும் எனச் சொல்ல, அதற்கு அவர்கள் சிற்பக்கலை ஆகம சங்கம விதிகள்படி, இந்த கோவிலை யார் கட்டுகிறார்கள். எந்த ஊரில், எந்த இடத்தில்.

சுற்றுப்புற அமைப்புகள், அந்த ஊரில் என்னென்ன தொழில்கள் நடைபெறுகின்றன போன்றவற்றிற்கு ஏற்ப ஜாதக கட்டம் போன்று அமைத்து முப்பொருத்தம் எனப்படும் நகரத்தாருக்கு, சுவாமிக்கு,ஊருக்கு என இம்மூன்று பொருத்தங்கள் பார்த்து, அதுபடி 2 அடி உயரத்தில் விக்ரஹம் அமைந்தால் இந்த கோவிலைக் கட்டும் சமூகத்தாருக்கு விருத்தி இருக்காது என்றார். பின் 1/2 உயர்த்தி 2 1/2 அடி உயரத்தில் அமைக்க அதற்குண்டான கட்டத்தைப் போட்டுப் பார்க்கும் போது, கோவில் கட்டிய சமூகத்தார் முன்னேற்றம் காண்பர், ஆனால் மற்றவர்களுக்கு சரிவராது என்றனர். பின்னர் மேலும் 1/2 உயர்த்தி 3 அடி உயரத்திற்குப் பார்த்த போது ஊர் மக்கள் செழிப்பாக இருப்பார்கள், கோவில் பிரசித்தி பெறாது என்றனர்.

இப்படி 1/2 அடி 1/4 அடியாக உயர்த்திக் கொண்டே வந்து 5 1/2 அடி உயரத்திற்குண்டான கட்டத்தைப் போட்டுக் கணித்து முப்பொருத்தம் பார்க்கும் போது தான் இந்த மஹாலக்ஷ்மி கோவிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரமே செழிப்பாய் வளமுடன் வந்து விடும் என்றும், கோவில் கட்டும் பாலையூர் நகரத்தார் சமுதாயத்தினரும், பாலையூர் கிராம மக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைந்து செல்வச் செழிப்புடன் வாழ்வர் எனக் கூறினார்கள். அதன்படியே நாங்களும் இந்த மஹாலக்ஷ்மி விக்ரஹம் அமைய ஒப்புக் கொண்டோம். விக்ரஹம் அமைக்கப்பட்டு கோவில் திருப்பணி முடிவடையும் தருவாயில் தான் விக்ரஹத்தை பாலையூருக்கு எடுத்து வந்து, கரிக்கோலத் திருவிழா நடத்தி நகர்வலம் கொண்டு வந்து, கோயிலினுள் கொண்டு சென்று ஜலவாசம், தானியவாசம், சயனத்தில் வாசம் என வைத்துப் பின் பிரதிஷ்டை செய்து, மஹா சம்ப்ரோட்சணம் செய்யப்பட்டது. கரிக்கோலத்திருவிழா நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்.

ஒரு பசுமாடு கோவில் முன்பாக கன்றுக்குட்டியை ஈன்று விட்டுச் சென்ற சம்பவம் நடந்தது. இதை ஊர் மக்கள் அனைவரும் அறிவர். மஹாலக்ஷ்மி பசுமாட்டின் பின்புறம் வாசம் செய்கிறாள் என்பதையும் அனைவரும் அறிவர். இந்தச் சம்பவம் மக்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் கோவில் முன்பாக உள்ள குளம் (ஊரணி) வெட்டி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் விக்ரஹம் பாலையூருக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன் அந்தக் குளம் தாமரைக் குளமாகிவிட்டது.

தாமரைப் பூவிலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதும், கோவில் எதிரில் உள்ள அந்தக் குளம் தாமரைக் குளமாக மாறியதும் மேலும் மக்களின் மனதில் ஆச்சரியம் மட்டுமின்றி, மஹாலக்ஷ்மியின் சக்தியையும் உணர்ந்து கொண்டனர்.

மேலும் கரிக் கோலத்திருவிழா நடத்த உத்தேசித்திருந்த 21.11.1999 அன்று கடும்புயலும் ஓயாத மழையும் பெய்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை பிறகு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கக் கூட முடிவு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை உடன் நின்று, மாலையில் கரிக்கோலத் திருவிழாவில் விக்ரஹம் நகர்வலம் வந்த மூன்று மணி நேரத்திற்கு மழையை நிறுத்தி, வெயில் வரவைத்து இரவு நிலவு வந்து பின் நகர்வலம் வந்து முடியும் தருவாயில், கோவிலுக்கு வந்தடைகின்ற நேரத்தில், மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதுவும் ஊர்மக்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் நடந்ததை எண்ணி, இந்த மஹாலக்ஷ்மியின் சக்தியை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்குகின்றனர்.

யாகசாலை ஆரம்பிப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பிருந்தே கனமழை பெய்து கொண்டு இருந்தது. யாகசாலை ஆரம்ப முதல் நாள் மழை நின்று பூமி குளிர்ந்தது. யாகசாலை அமைப்பில் வலது புறம் அரசமரம் (சிவன்), இடது புறம் வேப்பமரம் (அம்பாள்) நடுவில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகசாலை கும்பம். இப்படி ஒரு அமைப்பு ஏற்பட்டதும் மிகவும் சிறந்த அம்சமாகும்.

இந்த விக்ரஹம் வடித்து மஹாபலிபுரத்தில் இருக்கும் காலத்தில், பல வெளிநாட்டவர்கள் வந்து பார்த்து மிகவும் அற்புதமாக இருக்கிறது எனவும் பலரும் அவர்களுக்குத் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு இது வேறொருவர்களுக்காக வடிக்கப்பட்டது. தங்களுக்கு வேண்டுமானால் வேறு வடித்து தருவதாக அந்த சிற்பி சொல்லியுள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பொதுவாக சிலை வடிக்கும் முன் நாங்கள் கல்லை தேர்ந்து எடுப்போம். அப்படி இந்த விக்ரஹம் வடிக்க கல் தேர்வு செய்தபோது, அந்தக்கல்லில் வெண்கல ஒலி மணிபோல கேட்டதாகவும், மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் கூறினார். சிலை வடித்த பின்பும் தட்டினால் மணி ஒலி வந்ததை அனைவரும் அறிவர்.

மேலும் அந்த விக்ரஹம் பாலையூருக்கு கொண்டு வர மஹாபலிபுரத்தில் வேனில் ஏற்றுகின்ற சமயத்தில் சிற்பிக்கு கிடைத்த சில நல்ல தகவல்கள் மூலம் அவரது மனம் சந்தோஷப்பட்டு, இப்படியொரு அமைப்பு இந்த விக்ரஹத்திற்கு ஏற்பட்டது மிகவும் விஷேசம் எனவும் இந்த விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றவுடன் கோவில் வெகு சிறப்பாக பிரபலமாகிவிடும் என்றும் சொன்னது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவில் கட்டும்போது பாலையூரைச் சேர்ந்த திரு.சிதம்பரம் என்ற கல்வேலை செய்யும் நபருக்கு கல்நிலை, படிக்கட்டு போன்ற வேலைகள் செய்ய கான்ட்ராக்டாக செய்ய பேசி முடிவு செய்து ஒப்படைக்கப்பட்டது. அவர் செய்து முடிக்க காலதாமதமாகி விட்டதால், பேசியபடி வேலை செய்து முடிக்கும் போது அவருக்கு பல ஆயிரங்கள் கையிழப்பு ஏற்பட்டிருக்கிறது.. அவரும் பேசியதற்கு மேல் கேட்கக் கூடாது என்ற எண்ணத்தில் எதுவும் மேற்கொண்டு கேட்கவில்லை. இதை அனைவரும் அறிவர். ஆனால் அந்த விக்ரஹம் 1 1/2 டன் எடை உடையதை மஹாபலிபுரத்திலிருந்து வந்ததை இறக்கி வைத்ததும், பின் கோவிலுக்குள் எடுத்துச்சென்றதும் அவர் தலைமையில் தான், அதை அவர் வெகு சிரமப்பட்டு, திறமையாகக் கையாண்டு உள்ளே கொண்டு வைத்தது அனைவரையும் வியக்க வைத்தது.

இந்தக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் முன்பே, அவருக்கு பெங்களூரில் 36 இலட்ச ரூபாய்க்கு கல்வேலை காண்ட்ராக்ட் கிடைத்து, அட்வான்ஸ் வாங்கிய தொகையை மஹாலக்ஷ்மி கோவிலுக்கு கொண்டுவந்து இந்த தகவலை அவரே சொன்னார். இந்த மஹாலக்ஷ்மி கோவிலுக்கு நான் கைப்பொறுப்பில் வேலை செய்ததற்கு எனக்கு பெரிய ஆர்டர் கிடைக்க செய்து, லாபத்திற்கு வழி செய்துவிட்டாள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி என அவரே சொன்னது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.

மேலும் இந்தக் கோவில் கும்பாபிஷேகம் செய்து வைக்க ஸ்ரீரங்கம் பெரிய கோவிலிலிருந்து கோவில் தலைமை பட்டர் திரு.S.ஸ்ரீனிவாசராகவர் என்ற சுந்தர் பட்டர் வந்திருந்தார். அவருக்குப் பாலையூரிலேயே தேவகோட்டைக்குப் பக்கத்தில் உள்ள புலியூர் என்ற ஊரில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் (சம்ப்ரோட்சணம்) செய்து வைக்க பேசி முடித்து அந்த கும்பாபிஷேக விழா நடத்தி வைக்க வாய்ப்பு அமைந்தது. அவரும் அதை பெருமையாகக் கூறிவார்.

இப்படி ஒவ்வொருவருக்கும் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம், இது போல பலருக்கும் நிகழ்ந்ததைப் போன்று அனைவருக்கும் நலம் பலன் கிடைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மியை அனைவரும் வந்து தரிசித்து அன்னையின் அருட்கடாட்சம் பெற்று எல்லோரும் சீரும் சிறப்புமாக, செல்வச் செழிப்புடன் வாழ வேண்டுகிறோம்.

பாலையூர் நகரத்தார்கள்