பாலையூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருக்கோவில் வரலாறு”
பாலையூர் நகரத்தார்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து புதுவயல் அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள பாலையூர் (கண்டனுர் அஞ்சல்). இந்த ஊரில் நாட்டுக் கோட்டை நகரத்தார் மற்றும் பல இனத்தவரும் வசித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் பாலையூர் நகரத்தார் பெருமக்கள் கல்வியிலும், வாணிபத்திலும் மேலோங்கி இருந்தனர். பலர் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, செய்கோன் போன்ற வெளிநாடுகளில் கொண்டுவித்து, வாணிபம் செய்து வருகின்றனர். பாலையூர் நகரத்தார்கள் செட்டிநாட்டு மரப்புப்படி வீடுகளைக் கட்டிக் கொண்டும், நகரத்தார் சமூக விதிப்படி அனைத்து சடங்குகளும், சம்பரதாயங்களும் செய்து வருகின்றனர்.
பாலையூர் நகரத்தார் பெருமக்களில் வயிரவன் கோவில் பங்காளிகள் கண்டனூர் நகரச் சிவன் கோயிலில் ஆண்டு தோறும் ஆனிமாதக் கார்த்திகை அன்று மண்டகப்படி நடத்தி வருகிறார்கள். பாலையூரில் காரைக்குடி திரு.சுப்பிரமணியன் செட்டியார் பல ஆண்டுகளுக்கு முன் ஊரணி வெட்டி பிள்ளையார் கோவில் ஒன்றும் கட்டி வைத்திருக்கிறார்கள்.
1968ல் பாலையூரில் உள்ள வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த நாட்டார்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார்கள், அந்த கோவிலில், பாலையூர் நாட்டார்கள் அவர்களுக்கு அடுத்தபடியாக பாலையூர் நகரத்தார்களுக்கு காலாஞ்சி மரியாதை அன்று முதல் இன்றும் செய்து வருகிறார்கள். பாலையூர் நாட்டார்கள் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு பங்குனித் திருவிழாவில் (காப்புக் கட்டி) 2ம் நாள் மண்டகப்படியை பாலையூர் நகரத்தார்களுக்கு கொடுத்துள்ளார்கள். அந்த மண்டகப்படியை பாலையூர் நகரத்தார்கள் சீரும் சிறப்புடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, அம்மன் திருவீதி உலா நடத்தி, கலை நிகழ்ச்சிகளுடன் சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார்கள் கண்டனூருக்கும், புதுவயலுக்கும் மத்தியில் காட்டுச்சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று மண்டப்படியை பாலையூர் நகரத்தார்கள் நடத்தி வருகிறார்கள். குன்னக்குடியில் ஐந்து நாள் பூஜைக்கு புள்ளிப்படி அரிசி, பணம் கொடுத்து வருகிறோம்.
பாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம தெய்வங்கள் ஐயனார் கோவில், சின்னக்கருப்பர், முச்சந்திரிக் கருப்பர், முத்துச் சந்தியான் ஆகிய தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். பாலையூருக்குக் காப்புத்தடை என பாலையூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா, வேலங்குடி ஏழு ஊர் செவ்வாய், குன்னக்குடி பங்குனி உத்திர திருவிழா, கல்லாங்குடி தேர்திருவிழா ஆகியவற்றை வைத்து, கல்யாண விஷேசங்களை அதற்கேற்ப வைத்துக் கொள்ளும் பழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்தில், காலப்போக்கில் பாலையூர் நகரத்தார்கள் எல்லோரும் மேன்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றும். நமக்கென்று கோவில் வேண்டுமென்றும் சிந்தித்தோம். அதன் பின் சிலரின் அறிவுரைப்படி நாங்கள் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களைப் போய்ச் சந்தித்தோம். இது நடந்தது 15 வருடங்களுக்கு முன்பு. அவர், நீங்கள் உங்கள் ஊரில் கோவில் கட்டி நித்தியப்படி பூஜைகள் எதுவும் செய்வதில்லை. எனவே, எல்லோரும் ராமேஸ்வரம் போய் நீராடியும் பேரூர் சென்று பிதுர் கடன்களை எல்லோரும் ஒன்று கூடி தீர்த்து வரும்படி அறிவுரை சொன்னார்கள்.
பின், நாங்கள் பிள்ளையார் கோவில் கட்டலாமா? என்று கேட்டதற்கு, அவரும் உங்கள் ஊரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில் கட்டுங்கள் என அருள் பாலித்தார். அதன்படி 1990ல் பாலையூர் நகரத்தார்கள் பேரூருக்குச் சென்று பிதுர்க் கடன் நிவர்த்தி செய்து வந்தோம். அதன் பின் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோயில் கட்டுவது என தீர்மானித்தோம். முன்பெல்லாம் நகரத்தார் கூட்டங்கள் காரியக்காரர் வீடுகளில் நடைபெற்று வந்தன. நாளடைவில் பெரிய இட வசதிக்காக, தோதாக உள்ள வீடுகளில் நகரத்தார் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
இதனிடையில் வெளியூர்களிலிருந்து வரும் திருமண மாப்பிள்ளை அழைப்பதற்கும் நகரத்தார்கள் கூட்டம் கூட்டுவதற்கும் இடம் வேண்டும் என தீர்மானித்து, இப்போது கோவில் கட்டி உள்ள இடத்தை தேர்வு செய்து முதலில் காம்பவுண்டு சுவர் எடுத்து. ஓட்டு கட்டிடம் எழுப்பி, அதில் கூட்டம் நடத்தி வந்தோம். இது பாலையூர் நகரத்தார்களிடம் புள்ளிப்படி பணம் வசூல் செய்தும், பாலையூர் நகரத்தார்கள் பலரும் நன்கொடையாக சில கட்டிட செலவுகளை ஏற்றுக் கொண்டும் பூர்த்தி செய்யப்பட்டது.
பிறகு கோவில் கட்ட வேறு இடம் பார்க்கலாம் என்று யோசித்து, பின் இங்கேயே கட்டலாம் என முடிவு செய்து, புள்ளிப்படி பணம் பாலையூர் நகரத்தார்களிடம் வசூலிக்கப்பட்டு அவரவர்கள் வசதி சூழ்நிலைக் கேற்ப நன்கொடைகளும் கொடுத்து வந்தனர்.
முதலில் 1991ல் தச்சு செய்து நிதி திரட்டிக் கொண்டு, பின் மீண்டும் 1994ல் நகரத்தார்கள் கூட்டம் கூட்டி ‘திருப்பணிக்குழு’ என்று ஒரு குழுவை நியமித்து அதற்கு தலைவராக திரு.சித.தேனப்ப செட்டியார், INA தியாகி அவர்களையும் மற்றும் பொருளர், ஆலோசகர்கள், உறுப்பினர்கள் ஆகியோரையும் நியமித்து மீண்டும் புள்ளிப்படி பணம் வசூல் செய்வது எனவும், அனைவரும் உடன் புள்ளிப் பணங்களைக் கொடுக்க வேண்டும் எனவும், மற்ற ஊர் நகரத்தார்கள் செய்துள்ள திருப்பணிகளைச் சுட்டிக் காட்டி நாமும் விரைவில் கோவில் கட்டினால் தான் எல்லோருக்கும் முன்னேற்றங்கள் கிடைக்கும் என ஊக்கப் பூர்வமாகப் பேசியதன் பேரில், அனைவரும் ஒத்துழைத்தனர்.
அன்றைக்கு இரண்டு லட்ச மதிப்பீட்டில் கட்ட ஆரம்பித்து, ஒன்பது லட்ச மதிப்பில் வந்து நின்றது. இந்தக் கோவில் கட்ட பாலையூர் நகரத்தார்கள் புள்ளிப் பணம் மட்டும் கொடுத்ததோடல்லாமல்.
பலரும் தங்களால் முடிந்த செலவுகளையும் ஒவ்வொரு வேலையையும் பொறுப்பேற்றுக் கொண்டதும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாலையூர் நகரத்தார் பெருமக்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடைகளை வாங்கி வழங்கியதும், இந்தக் கோவில் கட்டி முடிக்க பெருந்துணையாக இருந்தது மேலும், இந்தக் கோவில் கட்டும் பணிக்கு பல ஆன்மீகப் பெருமக்கள் தாங்களாகவே முன் வந்தும் கேட்டும் நன்கொடை கொடுத்துதவியதும் இந்தக் கோவில் கட்ட பேருதவியாக இருந்தது.
இவ்வாறாக கட்டி முடித்து சிறந்த முறையில் முதல் மகா சம்ப்ரோட்சணம் 10.2.2000ல் நடைபெற்று பொதுமக்களின் நன்மைக்காக அன்றாடம் இரண்டு காலம் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திருக்கோயிலுக்கு அனைவரும் வந்து அன்னை மஹாலக்ஷ்மி யையும் (ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன்) சீனிவாச பெருமாளையும் வணங்கி, அன்னையின் அருட்கடாட்சத்தைப் பெற்று எல்லோரும் வளமாக வாழ வேண்டுமென்பது எங்களது விருப்பம் வாழ்க வளமுடன்!

